varany | வரணி – வந்தாரை வாழ வைக்கும் வரணி என்ற பெருமையைப் பெற்ற ஊர்

About Varany

varany | வரணி இந்திய உபகண்டத்திற்கு தெற்கே உள்ள இலங்கைத் திருநாட்டின் வடக்கே யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. அப் பிரதேசத்தில் சமய வாழ்வியலும் கல்வியும் சிறப்பாக உள்ள இடமாக தென்மராட்சி விளங்குகின்றது. தென்மராட்சியில் கொடிகாமத்திலிருந்து வடக்காக 2 கி.மீற்றர் தூரத்தில்  அமைந்துள்ள ஒரு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஊர்தான் வரணி.

இதன் எல்லைகளாக வடக்கே முள்ளி கடல் நீரேரியும் கிழக்கே மிருசுவில் கழிக்கரையும் தெற்கே கொடிகாம மின்கலமும் மேற்கே கரவெட்டியும் கப்பூது கடல் நீரேரியும் சுற்றிக் காணப்படுகின்றது.

இங்கு மிகவும் புகழ் பெற்றதும் பழமை வாய்ந்ததுமான ( சோழர்காலத்து) சுட்டிபுரம் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

வரணியில் ஏழு கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன‌

யா/337 குடமியன்
யா/338 நாவற்காடு
யா/339 வரணி வடக்கு
யா/340 மாசேரி
யா/341 இடைக்குறிச்சி
யா/342 கரம்பைக்குறிச்சி
யா/343 வரணி இயற்றாலை
யா/344 தாவளை இயற்றாலை

வரணி யில் உள்ள பாடசாலைகளின் விவரம்

வரணி மத்திய கல்லூரி – வரணி இயற்றாலை

யா/சைவபிரகாச வித்தியாலயம் – தம்பான்

கணபதிப்பிள்ளை வித்தியாலயம் – நாவற்காடு (வரணி இயற்றாலை)

ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம் – இடைக்குறிச்சி (சேவலப்பிட்டி)

அமெரிக்கன் மிசன். த. க. பாடசாலை – இயற்றாலை (குமரனி)

யா/வரணி வடக்கு அ. த. க பாடசாலை – கறுக்காய்

கரம்பை குருச்சி அ. த. க பாடசாலை – முத்தட்டு

யா/அ. த. க பாடசாலை – குடமியன்

கரம்பை அ. த. க பாடசாலை – நவக்காடு (முன்றாம்பள்ளம்)

மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம் – மந்துவில்

 

பண்டைக் காலத்தில் இயற்கையழகும் குடியிருப்புக்களாலும் ஏனைய பிரதேசங்களை விட வர்ணிக்ககூடிய வகையில் இப்பிரதேசம் காணப்பட்டமையால் வரணி/ varany என அழைத்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் வரணி என்பது மாவிலங்கம் என்ற ஒரு மரவகை என்பதன் திரிபே வரணி / varany எனக் கொண்டு செழிப்பான பூமி என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றுள்ளது என்பார்கள்.

பண்டைக்காலத்தில் பல பிராமணக்குடியிருப்புக்கள் நிறைந்து வாழ்ந்தமையின் அதனடிப்படையில் “வரணி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என முன்னோர்கள் கூறுவது முக்கியமானதாகும். இன்றும் இப்பிரதேசத்தில் வெங்கிராயன், தீனிக்கிராய் தாவளம் போன்ற இடங்கள் முக்கியம் பெறுவதைக் காணலாம்.
வெளிநாட்டு தொடர்பும் வாய்ப்பும் வரணிப் பிரதேச மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கை அந்தஸ்தையும் உயர்வடையச் செய்தது. இவ்வாறு புலம்பெயர் உறவுகள் ஒன்று பட்டு ஒற்றுமையாக செயற்பட்டு எமது வரணிப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான முயற்சிகளை முன்னெடுத்தால் எமது பழம் பெரும் வரலாற்றுப் பெருமைகளைப் பேணுவதுடன் வளரும் தலைமுறையினை முன்னேற்றப்பாதையில் வழிகாட்டமுடியும்.
வரணிப்பிரதேசத்தின் தனித்துவமான பண்பாட்டம்சங்கள் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பண்பாடு என்பது “அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் சமூதாய மரபுரிமையாக பெற்ற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய தொகுதி எனக் கொள்ளாலம்.” எனவே எமது பண்பாட்டு விடயங்களைக் கற்பிப்பதும் கற்பதும் எமது பொறுப்பாகும். பண்பாடானவை பின்பற்றப்படுவதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்படவேண்டிய கருமமாகும்.

எமது வரணிப்பிரதேச பண்பாட்டு அம்சங்கள் பல்வேறு காரணங்களால் மாற்றமடையக் கூடிய ஏது நிலை கடந்த காலத்தில் ஏறுபட்டது.

அரசியல் சமுக பொருளாதார மாற்றமும் இம் மாற்றத்தினால் ஏற்பட்ட கல்வி தொழில் தொடர்பாடல் புலம்பெயர்வு போன்றவை குறிப்பிடத்தக்கது.

எமது வரணிப்பிரதேசத்தில் பழம் பெரும் பண்பாடுகள் இன்றும் கட்டிக்காக்கப்படுகின்றது. உணவு உடை உறையுள் புழங்கும் பொருட்கள் வீட்டுப்பாவனைப் பெருட்கள் கட்டிடங்கள் எழதுகோல் ஏடுகள் வேளான் நிலங்கள் கால்நடைகள் தொழிற்கருவிகள் சடங்குப் பொருட்கள் என்பன எமது பண்பாட்டைச் சார்ந்து இன்றும் ஒளிருகின்றன. இதனை விட இன்றும் பழக்கவழக்கமும் நடிப்பு இசை நடனம் உணவு உண்ணும் முறை தலைவாரும் முறை எமது பண்பாட்டை இன்று மேலும் வளப்படுத்துகின்றது.

இவ்வாறான பண்பாட்டை எமது பிரதேசத்தில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்கள் முன்மாதிரியாகவும் சிறுவர்களுக்கும் அறிவுரையாகவும் கூறிவருகின்றனர்.

எமது வரணியின் சிறப்பை குறிப்பாக நோக்கும் போது வரணியிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள எம்மவர்கள் மதம் மாறாது இன்றும் எமது பண்பாட்டை அப்படியே தமது பிள்ளைகளுக்கு ஊட்டுவது எமக்கு நம்பிக்கையை தருகின்றது.

மாறாக சிலர் பணத்துக்காக எமது பண்பாட்டை விட்டு மதம் மாறி வாழ்ந்து வருவது வேதனை தரும் விடயமாக இருக்கின்றது.
எமது பிரதேசத்தின் பனாட்டு பழஞ்சோறும் ஒடியற்பிட்டும் பால் மோர் தயிர் என்றால் இன்றும் பலருக்கு விருப்பமாக இருக்கும். இன்று பல புதிய வகை உணவு எம்மை ஆட்கொண்ட போதும் நெல்லரிசி சோறு மதிய உணவாக உள்ளமை பண்பாட்டின் அங்கமாகும்.

முன்னோர்கள் கருத்துப்படி அன்று சுடச்சுட மொட்டைக்கறுப்பன் சோறு சமைத்து சாப்பிட்டவர்கள் என்றால் இன்று எமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உணவினை வாழையிலையில் இட்டு உண்பது தனிரகம்.
இன்றும் – அன்றும் வெள்ளை உடை அணியும் பழக்கம் எம்மவர் மத்தியில் உள்ளது. வேட்டியும் சால்வையும் அணிவது ஆண்களது மரபு. பெண்களது பண்பாட்டு உடையாக சாறி உள்ளது. இவ்வாறான பண்பாட்டு மரபை இளைய தலைமுறை பேணுவதற்கு வரணியிலும் புலம்பெயர்நாடுகளிலும் உள்ள எம் உறவுகள் கரிசனை காட்ட வேண்டும்.

எமது வரணிப் பண்பாட்டில் நாச்சார வீடுகள் பல இருந்துள்ளன.

varany வரணி நாச்சார வீடுகள் இன்று நவீன மாற்றத்தால் பல வீடுகள் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. பிள்ளைகளுக்கு நாச்சார வீடுகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. சமூக நோக்கில் கிணறு, சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல் என்பன கட்டப்பட்டது. வயல்வெளி குளங்களுக்கு அண்மையில் மாடுகள் தினவெடுக்கவென இவை முன்னோர்களால் கட்டப்பட்டு பேணப்பட்டு வந்தது. இவை பற்றி யாரும் இன்று அக்கறையற்று இருப்பது கவனிக்கத்தக்கது. தமது அன்றாடப் பாவனையில் புழங்குபொருட்களாக பெட்டகம், மூக்குப்பேணி, காசாண்டி…….. போன்றன இருந்துள்ளது. இவை பற்றிய சொற்பதங்கள் இன்று அருகி விட்டன. இன்று விஞ்ஞான ஆராச்சிகள் பித்தளைப் பாத்திரங்களின் மருத்துவ உண்மைகளை ஏற்றுள்ளன. அதனை எம் முன்னோர் உணர்ந்து வரணியில் செயலாற்றியுள்ளனர்

நம்பிக்கையில் வரணிப்பிரதேச மக்கள் அக்கறையுடையவர்களாக இருந்துள்ளனர். நாவுறு பார்த்தல் மருந்து பிழிதல், பார்வை பார்த்தல் தண்ணீர் ஓதுதல் ஏக்கத்திற்கு பார்த்தல் மாந்திரீக ரீதியான மருந்து விழுத்தல்……….. போன்றவற்றை கடைப்படித்துள்ளார்.

இன்று பல வழக்கிழந்து சென்றாலும் பாட்டிமார் உள்ள வீடுகளில் இவை நடைபெற்று வருவதைக் காணலாம்.

பரிவட்டம் காணல் பல்லி விழும் பலன், தும்மல், பல்லி சொல்லும் பலன் முழுவியளம் பார்த்தல்காகம் கரைதல் மூன்றாம் பிறை பார்த்தல் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சுழ்நிலையின் பின் இன்று சகலரும்முன்னோரின் நம்பிக்கையினை ஏற்று செயற்படத் தொடங்கியுள்ளமை சிறப்பானதாகும். வரவேற்கத்தக்கது.
வரணியில் வாழ்ந்த முன்னோர்கள் கூட்டு வாழ்வு கூட்டாக தொழில் செய்து நோய் நொடி இன்றி நீண்ட ஆயுள் பெற்று ஒற்றுமையாக வாழ்ந்தனர். மாடுகள் மேய்த்தல் வீடு வேய்தல் குளம் வெட்டுதல்……… போன்றன குறிப்பிடத்தக்கவை. புத்தாண்டு பிறந்தால் கிளித்தட்டு விளையாடும் பழக்கம் இளைஞர்களுக்கு உற்சாக மூட்டுவதாகும். தற்போது இவ்வாறான பாரம்பரியங்கள் பேணப்படுவது மருவி வரும் நிலை இருப்பதைக் காணலாம். தற்போது இப்பிரதேசத்தில் வழிபாடுகள் திருவிழாக்கள்சடங்குகள் நம்பிக்கைகள் தொன்று தொட்டு பேணப்படுவது விரும்பத்தக்கது.

இவ்வாறாக நோக்கும் போது வரணி / varany வரலாற்று சிறப்புமிக்க கிராமமாகும். அத்தகு சிறப்பான புண்ணிய பூமியில் பிறந்தவர்களும் அதனை புகுந்த இடமாக கொண்டவர்களும் புண்ணியவான்களே.

இவர்கள் எவ்விடத்தில் வாழ்ந்தாலும் எங்கு சென்று வசித்தாலும் வரணியின் பண்பாட்டையும் வாழ்வியலையும்நம்பிக்கைகளையும் கல்விச்சிந்தனைகளையும் பேணிப்பாதுகாப்பது அவசியமாகும்.

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு………. என்ற வாக்கிற்கேற்ப வாழ்ந்து பயனடைவோம். பிறர் வாழ வழிகாட்டுவோம். என்பதனை மனதிலிருத்துவோம்.