சிட்டிவேரம் அம்மன் கோயிலிலிருந்த சோழர் கால விக்கிரகம் மற்றும் நகைகள் கொள்ளை.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திலிருந்த சோழர் காலத்து விக்கிரகம் மற்றும் 25 பவுண் அம்மன் நகைகள் கோயில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோயிலின் பிரதான விக்கிரகத்தை புரட்டி அதனை அப்படியே கொண்டு சென்றுள்ளனர்.

அத்தோடு கோயிலிருந்த அம்மனின் நகைகள் மற்றும் ஏனைய விக்கிரகங்களின் நகைகள் என்பனவும் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வரலாற்றுப் புகழ்மிக்க சிட்டிவேரம் (சுட்டிபுரம்) கண்ணகையம்மன் ஆலயத்தில் மூலமூர்த்தியான கண்ணகி சிலை அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலபக்தர்கள் அழுதபடி ஆலயச் சூழலில் நின்றதைக் காணமுடிந்தது. நேற்று மாலை 3.00 மணிக்கு அவ்விடம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் அக்கோவிலை நேரடியாகப் பார்வையிட்டு ஆலய பரிபாலன சபையுடனும் கொடிகாமம் பொலிசாருடனும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது,

தமிழர்களின் ஆன்ம பலத்தை உடைப்பதற்காக அவர்களின் நற்சிந்தனையைச் சிதைப்பதற்காக திட்டமிட்ட வகையில் வகையில் வரலாற்றுப் புகழ்மிக்க இந்து ஆலயங்கள் மீது இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை வெறும் கொள்ளைச் சம்பவமாகப் மட்டும் பார்க்க முடியாது. தமிழர் வாழும் பிரதேசங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவியும், தமிழர் நிலங்களைப் பறித்து, மொழியுரிமையைக் கேள்விக்குட்படுத்தியும் கலைபண்பாடுகளைச் சிதைத்தும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே இச் செயற்பாட்டைப் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்சிக் காலத்தில் எந்தக் கோயிலிலும் திருட்டுக்கள் இடம்பெறவில்லை. நல்லூர் திருவிழாவில் 2000 பொலிசார் காவல் புரியவில்லை. தமிழ் மக்கள் பயபக்தியுடன் பண்பாடுகளைப் பேணி வாழ்க்கை நடாத்தினர். ஆனால் தமிழர்களின் வணக்கத் தலங்கள் வணக்கமுறைகள் எல்லாமே இப்பொழுது கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.

ஆகவே தமிழர்களுக்கு ஒரு சரியான பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் நீதியான முறையில் ஜனநாயக சூழலில் வாழவில்லை என்பதை மிகத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுவதோடு தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

  பிடித்திருந்தால் [ SHARE ] உங்களுடைய நண்பர்களுடன் பகிரவும்...........

பிந்திய பதிவுகள்